சுவிஸ்: 7°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சூரிச்–வின்டர்தூர் ரயில் பாதை விரிவாக்கம் – 10 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள்

சுமி•3 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சூரிச்–வின்டர்தூர் ரயில் பாதை விரிவாக்கம் – 10 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள்

சூரிச்–வின்டர்தூர் ரயில் பாதை விரிவாக்கம் – 10 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் வின்டர்தூர் நகரங்களுக்கு இடையேயான முக்கிய ரயில் பாதையை விரிவுபடுத்தும் பணிகள் இந்த ஆண்டு வசந்த காலத்தில் தொடங்கியுள்ளன. இந்தப் பிரமாண்டத் திட்டம் சுமார் பத்து ஆண்டுகள் நடைபெற உள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சமாக, சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள புரூட்டென் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. இரண்டு தனித்தனி சுரங்கப்பாதைகளில் ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

மேலும், வின்டர்தூர்-டோஸ், பாஸர்ஸ்டோர்ஃப், வாலிசெல்லன் மற்றும் டீட்லிகான் ஆகிய நான்கு ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

தற்போது சூரிச்–வின்டர்தூர் இடையே தினமும் சுமார் 670 ரயில்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். திட்டம் நிறைவடைந்த பின்னர், தினசரி ரயில் சேவைகள் சுமார் 900 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சுரங்கப்பாதை மூலம் சூரிச் முதல் வின்டர்தூர் வரையிலான பயண நேரம் அதிகபட்சமாக எட்டு நிமிடங்கள் குறையும். பிராந்திய ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதுடன், ரயில் சேவைகளின் நம்பகத்தன்மையும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு மொத்தம் சுமார் 3.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவாகும். அடுத்த பத்து ஆண்டுகளில், நாளொன்றுக்கு சராசரியாக ஒரு மில்லியன் பிராங்குகள் அளவுக்கு முதலீடு செய்யப்படும்.

இதற்கிடையில், கட்டுமானப் பணிகளால் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இரைச்சல், தூசி, கனரக வாகனப் போக்குவரத்து மற்றும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என SBB தெரிவித்துள்ளது. சில பணிகளை இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

புரூட்டென் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் சுமார் 45 லட்சம் டன் மண் தோண்டி எடுக்கப்படும். இந்த மண் சரக்கு ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

முக்கிய கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டு தொடங்கும். சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் 2029ஆம் ஆண்டு பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுமானப் பணிகளும் 2036ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை 2037ஆம் ஆண்டு டிசம்பர் மாத கால அட்டவணை மாற்றத்துடன் பயன்பாட்டுக்கு வரும் என SBB தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகளின்போதும் ரயில் சேவைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், 2026 டிசம்பர் கால அட்டவணை மாற்றத்துடன் சில S-Bahn சேவைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

பருவநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் அபாயங்கள்

பருவநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள், விவசாயப் பாதிப்புகள் மற்றும் இயற்கைச் சேதங்கள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றியவர்களுக்கு கட்டண உயர்வு குறைவு!

சுவிட்சர்லாந்தில் 2024ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 6.63 லட்சம் பேர், அதாவது காப்பீடு பெற்றவர்களில் 7.5 சதவீதம் பேர் தங்களது சுகாதாரக் காப்பீட்டு நிறுவனத்தை மாற்றியுள்ளனர்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

சுவிட்சர்லாந்தில் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சுவிட்சர்லாந்தில் ஓநாய்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து, தற்போது சுமார் 350 ஓநாய்கள் 43 கூட்டங்களாக வாழ்கின்றன. இருப்பினும், கால்நடைகள் மீதான தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

வாட் மாகாணத்தில் 40,000 மாணவர்கள், ஆசிரியர்களின் தரவுகள் திருட்டு!

சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலில், சுமார் 38,000 மாணவர்கள் மற்றும் 3,500 ஆசிரியர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளன.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm